தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுத் தொகுதி-1 (குரூப்-1) முதல்நிலைத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (OMR முறை) செப்டம்பர் 27-ஆம் தேதி முற்பகல் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி வட்டங்களில் உள்ள 21 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
இத் தேர்வினை மொத்தம் 6,408 தேர்வர்கள் எழுதவுள்ளனர். தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், இயக்கக்குழு அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் இக் கூட்டத்தில் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்ததாவது: தேர்வு செப்டம்பர் 27 அன்று காலை 09.30 மணிக்குத் தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் காலை 08.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வந்து சேர வேண்டும்.
காலை 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வுக்கூடத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வு நாளன்று தேர்வர்கள் சிரமமின்றி மையங்களுக்கு வந்து செல்லப் போதிய சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் தேர்வர்கள் கவனமாகப் படித்துக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. வித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

