தூத்துக்குடியில் ஓட்டுநர் உரிமம் இன்றி விதிகளை மீறிச் சிறார்கள் ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட நகர உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில், நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் உத்தரவின்படி காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, 18 வயது பூர்த்தியடையாத பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களை இயக்கி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகச் சிறார்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி 8 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், "18 வயது நிறைவடைவதற்கு முன்பாகப் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்களைக் கொடுக்கக் கூடாது.

பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து, சாலைப் போக்குவரத்து விதிகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தனர்.