பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி, புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன.
இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெருமாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பலவண்ண நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பத்மாவதி தாயார் அலங்காரத்தில் வைகுண்டபதி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் மகா தீபாராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்றைய வழிபாட்டின் சிறப்பம்சமாக, பத்மாவதி தாயார் சந்நிதியில் வைத்துப் பிரத்யேகமாகப் பூஜை செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம், குங்குமப் பிரசாதத்துடன் சேர்த்துப் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
அதிகாலை முதலே தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளைத் தரிசனம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

