தூத்துக்குடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில், குரூஸ் பர்னாந்து சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய மாநகரப் போக்குவரத்து காவல் மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்தைச் சீரமைக்கக் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குரூஸ் பர்னாந்து சிலை அருகே புதிய போக்குவரத்து காவல் மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தூத்துக்குடி நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், புதிய போக்குவரத்து காவல் மையத்தைத் திறந்து வைத்துப் பேசினார். தொடர்ந்து, ஒலிபெருக்கி மூலமாகப் பொதுமக்களுக்குப் போக்குவரத்து விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். மேலும், பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்குத் தலைக்கவசங்களை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் இயக்குநர் ஆனந்த், வட்டத் தெப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணமூர்த்தி, செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சரவணன், மத்திய வியாபாரிகள் சங்கப் பிரதிநிதி எம். உதயசூரியன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.