தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் தலைவரும், அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டிஎஸ்ஆர் சுபாஷ் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் பத்திரிகையாளர்களின் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனிடம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தலைமையில் மனு வழங்கப்பட்டது. இதில் தேசியக்குழு உறுப்பினர் சங்கர், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சண்முக ஆனந்த், நிர்வாகிகள் இம்மானுவேல் குணசிங், முருகன், வேம்பு கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய பத்திரிகையாளர் சங்கம் கடந்த ஆகஸ்ட் 8-9 தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதியை, பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கான "கோரிக்கைகள் தினமாக" நாடு முழுவதும் அனுசரிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதும் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது.
4 முக்கிய கோரிக்கைகள்:
1. புதிய ஊடக ஆணையம் அமைக்க வேண்டும்: இரண்டாவது பத்திரிகை ஆணையம் 1978-ல் நியமிக்கப்பட்டு 1982-ல் அறிக்கை சமர்ப்பித்தது. கடந்த 40 ஆண்டுகளில் 24 மணி நேர செய்தி சேனல்கள், டிஜிட்டல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என ஊடகச் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. எனவே நவீன காலத்திற்கு ஏற்ப கொள்கைகளை வகுக்க புதிய விரிவான ஊடக ஆணையம் அமைக்க வேண்டும்.
2. பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம்: ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்கள் உடல் தாக்குதல், தன்னிச்சையான கைது, ஆன்லைன் மிரட்டல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களையும், ஊடக நிறுவனங்களையும் பாதுகாக்க வலுவான சிறப்பு மத்திய சட்டம் இயற்ற வேண்டும்.
3. சட்டபூர்வ பாதுகாப்புகளை மீட்க வேண்டும்: பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சட்டம் 1955 மற்றும் ஊதிய நிர்ணய சட்டம் 1958 ஆகியவை புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களில் இணைக்கப்பட்டதால், வேலை பாதுகாப்பு, பணி நேரம், பணிநீக்க விதிமுறைகள் பலவீனமடைந்துள்ளன. பழைய சட்டத்தின் பாதுகாப்புகளை மீண்டும் வழங்க வேண்டும்.
4. புதிய ஊதியக்குழு: பத்திரிகையாளர்களுக்கான கடைசி ஊதியக்குழு (மஜிதியா குழு) 2007-ல் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக ஊதியம் திருத்தப்படவில்லை. பணவீக்கத்திற்கு ஏற்ப அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடக பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்.
சுதந்திரமான பத்திரிகைத் துறையை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

