வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மடத்தூர் முருகேசன் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய், மில்லர்புரம் மற்றும் கருத்தப்பாலம் ரோடு பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை ஆகியவற்றை ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அண்ணா நகர் 10-வது தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடை, எட்டயபுரம் ரோடு, இசக்கியம்மன் கோவில் ஓடை மற்றும் இசக்கியம்மன் கோவில் ஓடையிலிருந்து ஸ்டேட் பாங்க் காலனி பகுதிக்குச் செல்லும் கால்வாய் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின் போது, மழைக்காலத்தில் எங்கும் தண்ணீர் தேங்காத வண்ணம் ஓடைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை உடனுக்குடன் அகற்றிச் சீரமைக்க வேண்டும் எனத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

