தூத்துக்குடி சங்கரப்பேரி கே.வி.கே. சாமி நகரைச் சேர்ந்த கருப்பசாமி (57) என்பவர் கடந்த 23.09.2026 அன்று காலை 9 மணியளவில் உழவர் சந்தை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, மேலூர் ரயில் நிலையப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிரே வந்த இரு நபர்கள், கருப்பசாமியை வழிமறித்துத் தாக்கி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டனர். மேலும், தடுத்த அவரை கத்தியால் தலையில் குத்தியதில் கருப்பசாமிக்குக் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்திய திருநெல்வேலி இருப்புப் பாதை வட்ட ஆய்வாளர் செல்வி, தூத்துக்குடி இரண்டாவது கேட் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ராம லக்ஷ்மணன் என்பவரைக் கைது செய்தார்.

அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போன், கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் பல்சர்' பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராம லக்ஷ்மணனை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு எதிரியான தேவராஜன் என்பவரைத் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வேறு ஒரு வழக்கில் கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.