பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கை மற்றும் மக்கள் சேவையைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு சேவைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டுத் தொடங்கப்பட்ட இந்தச் சேவைப் பணிகள், ஒரு மாத காலத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி முன்பு மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ரங்கோலி கோலம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் 20-க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் நோக்கங்களை எடுத்துரைக்கும் வகையில் வண்ணமயமான ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டன. குறிப்பாக, ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, ஸ்டார்ட் அப் இந்தியா, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கோலங்கள் மூலம் கலைநயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தன.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அரசின் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை எடுத்துரைக்கும் நோக்கிலும் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஏ.எம். ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் காளிராஜா, கிழக்கு மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம், வணிகப் பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், மாவட்டச் செயலாளர் செல்வி, இளைஞரணி சக்திவேல், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், ஓ.பி.சி. அணி மாவட்டப் பொதுச்செயலாளர் வன்னியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் டாக்டர் சுதா, மகளிர் அணி மாவட்டத் தலைவர் வெள்ளத்தாய், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் உஷா மற்றும் கிழக்கு மண்டலச் செயலாளர் ஜெயரூபி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.