தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில், பள்ளியின் வளாகத்தில் 8-வது ஆண்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. விழாவிற்குப் பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிட மணி தலைமை தாங்கினார்.
செயலாளர் டி.ஆர். தமிழரசு முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை மெலிண்டா சூசன் தாமஸ் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் ஜோ. பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்னாள் டைரக்டர் சி.எஸ்.ஆர். அசோக் கலந்துகொண்டு செஸ் போட்டிகளைத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
மாவட்டம் முழுவதும் உள்ள 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மொத்தம் 340 மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 8 வயதுக்கு உட்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 12 வயதுக்கு உட்பட்டவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என மொத்தம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் என மொத்தம் 80 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் தென்பாகம் காவல்துறை ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் மற்றும் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர். விழா நிறைவில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை கிறிஸ்டோபல் ஜூடி மோத்தா நன்றியுரை கூறினார்.

