தூத்துக்குடி நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரிய வின்சென்ட் (72). இவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.எம். சகாயராஜின் தந்தை ஆவார். சமூக ஆர்வலரான இவர், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் சட்டவிரோமாகக் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் (எ) கற்பகராஜ் (35) என்பவர், மரிய வின்சென்ட்டின் வீட்டிற்குச் சென்று 'கள்ளச்சந்தையில் மது விற்பனை குறித்து எப்படிப் புகார் அளிக்கலாம்?' எனக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார்.தொடர்ந்து, மரிய வின்சென்ட்டின் முகம் மற்றும் கண் பகுதியில் கைகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் கண் பகுதி வீங்கி நிலைகுலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகாண்டீபன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தலைமறைவாக உள்ள ராஜ் (எ) பொன் கற்பகராஜை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடித் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்டவரின் மகனும், மாவட்ட காங்கிரஸ் தலைவருமான சகாயராஜ் கூறும்போது: "நான் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எனது தந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத்தை நேரில் சந்தித்து நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்." என்று தெரிவித்துள்ளார்.

