தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மற்றும் மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் பிரம்மாண்ட 'வியாபார அபிவிருத்தி விநாயகர்' சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று காலையில் இறுதிப் பூஜைகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மினி வேனில் ஏற்றப்பட்ட விநாயகர் சிலை, மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் பின்புறம் உள்ள கடற்கரைக்குச் சிலை கொண்டு வரப்பட்டு, அங்கு மீண்டும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், கிரேன் மூலம் விநாயகர் சிலை கடலில் இறக்கப்பட்டுப் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் உட்பட திரளான வியாபாரிகள் கலந்துகொண்டனர்.