கடந்த 2019-ஆம் ஆண்டு சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார், சாத்தான்குளம் கட்டாரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மகன் தங்கையா தவமணி (எ) ஞானதுரை (67) என்பவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி முருகன் இன்று (செப்டம்பர் 16) தீர்ப்பு வழங்கினார். அதில், தங்கையா தவமணி (எ) ஞானதுரை மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

