தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சந்தையாடித் தெருவைச் சேர்ந்தவர் லாமேக் வினோத். இவரது மகள் பெல்சியா (19). இவர் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பெல்சியா, இரவு வீட்டின் தனி அறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அறையின் விட்டத்தில் சேலையால் தூக்குமாட்டிய நிலையில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையப் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

