தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா, தர்மபுரி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (39). இவர் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். இன்று, கண்டெய்னர் பெட்டியை ஏற்றுவதற்காக டி.பி. வேர்ல்ட் என்ற நிறுவனம் செல்லும் சர்வீஸ் சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, சாலையில் பழைய காகிதக் கட்டுகள் லோடு ஏற்றப்பட்டு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாகக் கணேசனின் லாரி பலமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்க கேபின் பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்து நொறுங்கியது. இதில் ஓட்டுநர் கணேசன் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிப் போராடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் கணேசனைப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட கணேசனுக்கு வலது காலில் எலும்பு முறிவும் தோள்பட்டை மற்றும் முகத்தில் சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நிறுத்தப்பட்டிருந்த லாரியின் ஓட்டுநரான சிவகிரி தாலுகா விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்த குணசேகரன் (46) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

