தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பில் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி எதிரே அமைந்துள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச் சிறப்பு ஏற்பாடு பணிக்குச் செல்வோர் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் தங்களது ஆதார் விபரங்களில் திருத்தங்களை எளிதாக மேற்கொள்வதற்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

இவை தவிர, தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தலைமை அஞ்சலகங்கள், ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், சிதம்பரநகர், ஏரல், காயல்பட்டினம், குலசேகரப்பட்டணம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், மேலூர், முதலூர், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லர்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூர் மற்றும் படுக்கப்பத்து ஆகிய அஞ்சலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

கட்டண விவரங்கள்:

புதிய பதிவு: புதிய ஆதார் பதிவு செய்வதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை.

கட்டாயப் புதுப்பித்தல்: 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்குச் செய்யப்படும் கட்டாயக் கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் கிடையாது.

விவரத் திருத்தம்: பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்குக் கட்டணம் ரூ. 75/-.

பயோமெட்ரிக் திருத்தம்: புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளின் திருத்தங்களுக்குக் கட்டணம் ரூ. 125/- ஆகும்.

அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அவசியமாக உள்ளதால், பொதுமக்கள் இச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகள் அல்லது கிராமங்களில் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்த விரும்பினால், வணிகத் தொடர்பு அலுவலர்கள் ஜெபன்ஸ் (9841875710), ஷமீம் (9791655030) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் வை. தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.