தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்க ராஜா மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அம்பேத் நகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், சந்திரன் என்பவரின் மகன் அருள்ராஜ் என்ற கருவாடு (25) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அருள்ராஜிடம் கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து நடத்திய தீவிர விசாரணையில், பிரபல ரவுடியான பிஸ்டல் ரவி என்ற ஹரி பிரசாத்திடமிருந்து (27) கஞ்சாவை வாங்கியதாகத் தெரிவித்தார்.
அதன் பேரில் பிஸ்டல் ரவியைப் பிடித்துக் காவல்துறையினர் சோதனையிட்டதில், அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரிடமிருந்தும் மொத்தம் 8 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிஸ்டல் ரவி மீது சேலம் ரவுடி மதனைப் பழிக்குப் பழியாகக் கொன்ற வழக்கு மற்றும் மூன்று கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், அருள்ராஜ் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

