தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின்பேரில், டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் ஆலோசனையின்படி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கையில் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவரைத் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கபில்தேவ் (25) என்பது தெரியவந்தது. இவர் தற்போது மூன்று சென்ட் அந்தோணியார்புரத்தில் வசித்து வருகிறார்.
மேலும், இவர் மீது கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருந்து விடுதலையான பிரபல ரவுடி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து கபில்தேவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

