தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார், கோமாஸ்புரம் மயானக்கரை பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தனர்.அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காகப் பைகளில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாதவன் மகன் ஜெயசூர்யா (19) என்பது தெரியவந்தது. இவர் கேரளா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறு சிறு பொட்டலங்களாகப் போட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார், ஜெயசூர்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

