தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் சிறப்பு முன்னெடுப்பில், மானாவாரி வட்டாரங்களான கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் முற்றிலும் இலவசமாகப் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத் திட்டத்தின் கீழ் இதுவரை 810 விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தூத்துக்குடி மாவட்ட மானாவாரி வட்டாரங்களில் சுமார் 1,45,000 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம், பருத்தி, சிறுதானியங்கள், வெங்காயம், மிளகாய், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

பருவமழை மாறுபாட்டால் விளைச்சல் பாதிப்படைவதைத் தவிர்க்கும் பொருட்டு இப் பண்ணைக்குட்டைகள் பயனுள்ளதாக அமையும்:

விவசாயிகளின் விருப்பம் மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப 15மீx15மீx2மீ, 18மீx18மீx2மீ, 20மீx20மீx2மீ போன்ற அளவுகளில் இலவசமாக அமைத்துத் தரப்படும்.

மழைக்காலத்தில் வீணாகும் மழைநீர் சேகரிக்கப்பட்டு, பயிர்களின் விதை முளைப்பு, பூக்கும் தருணம் மற்றும் காய்க்கும் தருணங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படும்.

பண்ணைக்குட்டைகளில் தண்ணீர் இருக்கும் காலங்களில் மீன் வளர்ப்பு மேற்கொண்டு விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறலாம்.

வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மீதமுள்ள பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே, பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் உடனடியாக இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை நேரில் அணுகலாம்.

அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கைபேசி எண் 96299 14199-ஐ தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தைப் பதிவு செய்யலாம். விருப்பம் தெரிவிக்கும் விவசாயிகளின் நிலங்கள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக இலவசமாகப் பண்ணைக்குட்டைகள் அமைத்துத் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.