தூத்துக்குடி, வ.உ.சி. சிதம்பரனார் துறைமுகத்திற்கு வியட்நாம் நாட்டுடனான நேரடி கப்பல் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் வகையில், ‘எம்.வி. ஹையான் ஆல்ஃபா’ என்ற சரக்குக் கப்பல் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி முதன்முறையாக வந்து சேர்ந்தது.
துறைமுகத்தின் தட்சின் பாரத் கேட்வே முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இக்கப்பல், 1,781 சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. 171.9 மீட்டர் நீளமும், 28.4 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல், சென்னை-வியட்நாம் சரக்குக் கப்பல் சேவையின் கீழ் இயக்கப்படுகிறது.
இந்த புதிய கப்பல் சேவை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்படவுள்ளது. இச்சேவை தூத்துக்குடி, சென்னை, வியட்நாமின் ஹோ சி மின் நகரம், ஹாய் போங், சீனாவின் கின்சோ, மலேசியாவின் போர்ட் கிளாங் வழியாக மீண்டும் தூத்துக்குடியை வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடியில் இருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்தைச் சென்றடைய சுமார் 7 நாட்களும், ஹாய் போங் நகரத்தைச் சென்றடைய சுமார் 10 நாட்களும் மட்டுமே ஆகும்.
முதல் வருகையின் போது, இக்கப்பல் மூலம் மொத்தம் 823 சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டன. இதில் 723 பெட்டகங்கள் இறக்குமதி சரக்குகளாகவும் (குறிப்பாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்துக்கான சரக்குகள்), 100 சரக்குப் பெட்டகங்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பப்பட வேண்டிய மறுபரிமாற்றச் சரக்குகளாகவும் (Transshipment) இருந்தன.
புதிய கப்பல் சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தட்சின் பாரத் கேட்வே முனையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், போக்குவரத்துப் பிரிவு மேலாளர் சுதீப்தா பானர்ஜி, டி.பி.ஜி.டி. தலைமைச் செயல் அதிகாரி செந்தில்குமார் சுப்பிரமணியன், சாம்சாரா குழும பொது மேலாளர் பக்ஷி முகமது ஹனீப், கப்பல் கேப்டன் நுயென் நாம் டின் மற்றும் துறைமுக அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் கூறுகையில், "ஹையான் ஆல்ஃபா கப்பலின் வருகை, வியத்நாம் உடனான நேரடி கடல்வழி வர்த்தகத் தொடர்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தையும், பிராந்திய தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் கடல்வழி இணைப்புகளை வலுப்படுத்த துறைமுக நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

