தூத்துக்குடி - திருநெல்வேலி, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சந்திப்பு பகுதியாக‌ வி.வி.டி. சிக்னல் இருந்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு மேம்பாலப் பணிகளுக்காக திட்டமிடப்பட்டு பாளையங்கோட்டை சாலையில் அப்போதைய ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். பின்னர், மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டது. அதற்கான நிதியும் திருப்பி அனுப்பப்பட்டது.

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் கூட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

மேம்பாலப் பணிகள் தொடங்க உத்தரவிட்டு நீண்ட காலமாகியும் இன்னும் துவங்கப் படாமல் இழுத்தடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மேம்பாலப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, பணிகளை விரைவுபடுத்தி முடிக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.