தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில், நேரடி சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து மூலம் கையாளப்படும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளுக்கு 10 நாட்கள் இலவச சேமிப்பு கால வசதியும், கூடுதல் சேமிப்பு இடவசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
துறைமுகத்தின் மூலம் சரக்குப் பெட்டகப் போக்குவரத்தை எளிதாக்கி ஊக்குவிக்கும் நோக்கில் இப் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காகச் சரக்கு தளத்தில் இரு இடங்களில் கூடுதல் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. சரக்கு தளம் - 7 இல் சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு. சரக்கு தளம் - 10 அருகில் மேலும் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு என மொத்தம் 40,000 சதுர மீட்டர் கூடுதல் பரப்பளவு, நேரடி சரக்கு பெட்டகக் கப்பல் சேவைகள் மூலம் துறைமுகத்திற்கு வரும் சரக்குப் பெட்டகங்களைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
புதிய நடைமுறையின் படி, நேரடி சரக்குப் பெட்டகக் கப்பல் போக்குவரத்து சேவைகள் மூலம் கையாளப்படும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளுக்கு 10 நாட்கள் இலவச சேமிப்புக் காலம் வழங்கப்படும். 10 நாட்களுக்குப் பின்னர், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் நடைமுறையில் உள்ள கட்டண விகித அட்டவணையின்படி வழக்கமான சேமிப்புக் கட்டணங்கள் விதிக்கப்படும்.
இச்சலுகை வசதியானது நேரடி சரக்குக் கப்பல் இயக்குநர்கள், முனைய இயக்குநர்கள், பெருந்தொழில் நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர்கள், சுங்கத் தரகர்கள், கப்பல் இயக்காமல் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் (NVOCC) மற்றும் பிற பங்குதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இச் சலுகை துறைமுகத்தின் நடைமுறை விதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
துறைமுகம் கடந்த 06.05.2026 அன்று வெளியிட்ட வர்த்தக அறிவிப்பின் படி, சலுகைத் திட்டம் 1 (Scheme 1), சலுகைத் திட்டம் 2 (Scheme 2) மற்றும் சலுகைத் திட்டம் 2A ஆகியவற்றின் கீழ் வரும் நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்திற்கு மட்டுமே இச் சலுகை பொருந்தும். இப்புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும், வரும் 31 மார்ச் 2027 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பயன்பாட்டு விவரங்கள் மற்றும் நிபந்தனைகளுக்குத் துறைமுகம் 23.09.2026 அன்று வெளியிட்டுள்ள வர்த்தக அறிவிப்பினைக் பார்த்துத் தெரிந்து கொள்ளுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

