தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள 9-வது கன்டெய்னர் முனையத்தில் லாரி ஓட்டுநர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் ஏற்றுமதி கன்டெய்னர்களைக் கையாள்வதில் ஏற்படும் காலதாமதத்தைச் சீரமைக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் செப்டம்பர் நேற்று இரவு 7 மணி முதல் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு AICCTU மாநிலத் துணைத் தலைவர் சகாயம் தலைமை தாங்கினார்.
இதில் சங்க நிர்வாகிகள் சரவணன், நிஷாந்த், முனியசாமி உட்படப் திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். டிரைவர்களின் திடீர் போராட்டத்தைத் தொடர்ந்து, 'தூத்துக்குடி இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட்' நிர்வாகத்தினர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், ஓட்டுநர்களின் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாகவும், ஏற்றுமதி கன்டெய்னர் கையாளுதலில் ஏற்படும் காலதாமதத்தை உடனடியாகச் சரிசெய்வதாகவும் நிர்வாகத் தரப்பில் தொழிற்சங்கத்திடம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நள்ளிரவு 1 மணி அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

