பவள விழா ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 'லிவோரா 2026' பிரமாண்ட இயற்கை மற்றும் வனவிலங்கு கண்காட்சி அக்.7 முதல் 10 வரை நடக்கிறது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ஏ.பி.சி.வி. வீரபாகு மற்றும் பேராசிரியர் ராதிகா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:"நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி, பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே காடுகளின் பாதுகாப்பு, மனித உயிர்வாழ்வில் காடுகளின் முக்கியத்துவம், அறிவியல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

வகுப்பறைக் கல்வியைத் தாண்டி இயற்கையின் பல்லுயிர் வளத்தை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை இது வழங்கும். இக்கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அழகிய அயல்நாட்டுப் பறவைகள் மற்றும் பிரத்யேகக் கடல் மீன் காட்சியகங்கள், அறிவியல் மாதிரிகள், நுண்ணுயிரிகள் மற்றும் இருளில் ஒளிரும் உயிரிகளின் உலகம், 'Paws on Parade' மற்றும் 'Desert Vibes' உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன.

மேலும், வனச் சூழல், வனவிலங்குகளின் வாழிடங்கள், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுக் காட்சிகள் இடம்பெறும். அக்டோபர் 7 முதல் 9 வரை பதிவு செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பார்வையிடலாம்.

பொதுமக்களுக்கு மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அனுமதி உண்டு. அக்டோபர் 10 (நிறைவு நாள்) பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நாள் முழுதும் பார்வையிடலாம்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் 'LIVORA 2026' கண்காட்சியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இயற்கையின் அதிசயங்களை அனுபவித்து விழிப்புணர்வு பெறலாம் என்று தெரிவித்தனர்.