உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீரஜ் குமார் (19) என்பவர், காற்றாலை பாகங்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரியில் கடந்த 8 மாதங்களாகக் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், வ.உ.சி துறைமுகத்தின் கூடுதல் தளத்தில் இருந்து காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு, 3-வது பிரதான தளத்தை நோக்கி லாரி வந்துகொண்டிருந்தது.
அப்போது லாரியின் அடியில் தொட்டில் போல் கட்டி உறங்கும் வழக்கம் கொண்ட நீரஜ் குமார், வழக்கம்போல் லாரியின் அடியில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறியாத லாரி ஓட்டுநரான உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அலி ஹுசைன் (19) லாரியை இயக்கத் தொடங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரஜ் குமார் லாரியின் அடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கவனிக்காத இயங்குநர் மும்பையைச் சேர்ந்த தேவநாராயணன் (39) லாரியை இயக்குமாறு சிக்னல் கொடுத்துள்ளார். லாரி நகர்ந்தபோது, நீரஜ் குமார் லாரியின் பின்புற டயரில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து, உயிரிழந்த நீரஜ் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

