தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH-38), தூத்துக்குடி மாநகராட்சி எல்லையில் இருந்து வெறும் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) விதிமுறைகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லையில் இருந்து குறைந்தபட்சம் 10 கி.மீ தொலைவிற்கு அப்பால் தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். ஆனால் இந்த விதியை மீறி உள்ளூர் எம்பி, எம்எல்ஏ உள்ளிட்டோரின் ஆதரவுடன் தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவிலேயே இந்த சுங்கச்சாவடி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தூத்துக்குடி - மதுரை சாலையில் தினமும் பணிக்கு சென்று வரும் உள்ளூர் வாகன ஓட்டிகள், ஓட்டப்பிடாரம், குளத்தூர், வேப்பலோடை, மேலமருதூர், கீழ அரசரடி, மேல அரசரடி மற்றும் இராமேஸ்வரம் இசிஆர் சாலையாக புதூர்பாண்டியாபுரம் வழியாக வரும் சுற்றுவட்டார கிராம மக்கள் தூத்துக்குடி மாநகருக்குள் வந்து செல்லவே தினமும் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும், இந்த சாலையில் ஆங்காங்கே சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள நிலையில், முறையான பராமரிப்பு இன்றி சுங்கக்கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியை விதிமுறைப்படி 10 கி.மீட்டருக்கு அப்பால் மாற்றி அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.