தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளர் சுந்தர் தலைமையிலான போலீசார் பேயன்விளை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் காயல்பட்டினம் பாஸ் நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வகுமார் (22), ரத்தினபுரியைச் சேர்ந்த ராஜீவ் பிரபு (36), குரும்பூர் அருகே உள்ள நல்லூர், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி மகன் நவீன் செல்வகுமார் (28) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில், பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 100 கிராம் கஞ்சாவைச் சிறிய பொட்டலங்களாக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வகுமார் மற்றும் ராஜீவ் பிரபு ஆகிய இருவரையும் திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மற்றொரு நபரான நவீன் செல்வகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

