மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களின் 3 விசைப்படகுகளுக்கு இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.4.80 கோடி அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தருவைகுளம் மீனவ கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த சுதர்சன், சங்கர், சூசை பாக்கியம் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளில், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நிக்சன், ஜாக்சன், அமல்ராஜ், ராஜேஷ் ஷாம், சால்டன் உள்ளிட்ட 25 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி மாலத்தீவு கடல் பகுதி அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மாலத்தீவு கடற்படையினர் 3 விசைப்படகுகளையும், 25 மீனவர்களையும் சிறைபிடித்து அந்நாட்டுத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், மாலத்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது, உரிமம் இன்றி மீன்பிடித்தது, தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாலத்தீவு அரசின் மீன்வளத்துறை ஒவ்வொரு விசைப்படகுக்கும் அந்நாட்டு நாணய மதிப்பில் தலா ரூ.26 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இது இந்திய மதிப்பில் ஒரு படகுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 24 ஆயிரம் வீதம், 3 படகுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.4 கோடியே 80 லட்சத்து 72 ஆயிரம் அபராதமாகும். ஏற்கெனவே மீனவர்களையும் படகுகளையும் அபராதமின்றி மீட்கக் கோரி தமிழக முதல்வர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள மிக பெருந்தொகையான இந்த அபராதம் மீனவக் குடும்பங்களை நிலைகுலைய வைத்துள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தி, அபராதத்தைத் தள்ளுபடி செய்து மீனவர்களையும் படகுகளையும் தாயகம் மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தருவைகுளம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.