இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாகப் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான 25 டன் கொட்டைப் பாக்குகளைக் கடத்தி வந்த இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் கைது செய்துள்ளனர்.
இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொட்டைப்பாக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், துறைமுகத்திற்கு வந்த சந்தேகத்திற்குரிய கன்டெய்னரை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்தச் சோதனையில், உரிய இறக்குமதி ஆவணங்களின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 25 டன் எடையுள்ள பச்சை மற்றும் வறுத்த கொட்டைப் பாக்குகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ.2 கோடி அளவிற்குப் சுங்க வரி ஏய்ப்பு செய்ய முயன்றதும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சொர்ணராஜ் (45) மற்றும் கேரள மாநிலம் கண்ணனூரைச் சேர்ந்த முகமது சபீர் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர்களைப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

