தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள கே.வெங்கடேஸ்வரபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகன் முத்துமாரிசாமி (35). இவர் தனியார் பேருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தார்; இவருக்குத் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் குளிப்பதற்காக வெந்நீர் போடுவதற்காக அவர் வாட்டர் ஹீட்டர் சுவிட்சை அழுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக வாட்டர் ஹீட்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அவரது முகம் உள்ளிட்ட உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

