தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வ.உ.சி. காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார் மனைவி விசித்ரா (26). இவர் நேற்று கொடியங்குளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தனது தந்தை முருகன் என்பவரது இருசக்கர வாகனத்தில் அவர் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அக்கநாயக்கன்பட்டி கிராமம் அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது, விசித்ரா கழுத்தில் அணிந்திருந்த சால்வை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதன் காரணமாக அவர் நிலைதடுமாறி வண்டியிலிருந்து கீழே விழுந்ததில், அவரது பின் தலையில் பலத்த அடிபட்டது.
இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

