தூத்துக்குடியில், காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள 'வெற்றி பயணம்' திட்டத்தின் முன்னேற்பாட்டுப் பணிகளைப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகளிர் நலன் கருதியும், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களும் போக்குவரத்துக் கட்டணத்தால் தங்களுக்கான வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்ற சமூக நீதிச் சிந்தனையையும் முதன்மையாகக் கொண்டு 'வெற்றி பயணம்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அக்டோபர் 2 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

இத்திட்டத்தின் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பேருந்துகள் இயக்கம் குறித்துத் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறைச் செயலாளர் இல. நிர்மல்ராஜ் இன்று(25.09.2026) ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைகளை அலுவலர்களுக்கு வழங்கிய அவர், முதலமைச்சரால் தொடங்கப்படவுள்ள இச் சிறப்புத் திட்டத்தைச் சிறப்பான முறையில் செயல்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது திருநெல்வேலி கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் க. செல்வம், தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.