சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் 'தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கையின்' அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், மீனாட்சிப்பட்டி ஸ்ரீமூலக்கரை, தாமிரபரணி ஆற்றுப்பகுதி, ஆழ்வார்திருநகரி, கொந்தன்குறிச்சி, உமரிக்கோட்டை மற்றும் கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கிராமப் பகுதிகளில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் நேற்று புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், "நீர்நிலைகளில் அடர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்குத் தேவையான போதுமான நிதி ஆதாரம் கிடைத்தவுடன், அனைத்துத் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து பணிகள் மேலும் வேகப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபு, நீர்வளத்துறை செயற்பொறியாளர் தங்கராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சந்திரசேகரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

