வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் எளிதில் வடிந்து செல்ல ஏதுவாக நகரின் பிரதான வடிகால்கள் மற்றும் நீர்வழித்தடங்களைச் சுத்தம் செய்தல், தாழ்வான பகுதிகளில் மின்மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்தல், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகளை இருப்பு வைத்தல் போன்ற பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில், சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினமான இன்று ஜின் பாக்டரி ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் மதுமிதா தலைமையில், மை பாரத் கேந்திராவைச் சேர்ந்த செல்வலிங்கம் மற்றும் 'இளம் பேரிடர் நண்பன்' அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாநகராட்சியுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில், வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி குறித்து மாணவர்களுக்குச் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், 'குறைந்த பேரிடர் அபாயம் – பாதுகாப்பான வாழ்க்கை – வலுவான எதிர்காலம்' என்ற நோக்கத்துடன் பேரிடர் காலங்களில் பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

