தூத்துக்குடி மாநகராட்சியின் முதன்மை அலுவலகம் அமைந்துள்ள பிரதான சாலையின் ஓரத்தில், கடந்த சில நாட்களாகக் கழிவுநீர் பெருக்கெடுத்து வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

அப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் இப்பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தின் மிக அருகிலேயே இந்நிலை நீடித்தும், இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாகக் கழிவுநீர் வெளியேறுவதைத் தடுத்து, தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தப் மாநகராட்சி ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.