தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் தமிழ்த் துறை, காமராஜர் கலை இலக்கியக் கழகம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் ஆகியவை சார்பில் கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்குத் தமிழ்த் துறைத் தலைவர் திலகவதி தலைமை தாங்கினார்.
கல்லூரித் துணை முதல்வர் அருணாசல ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மு. செல்வி எழுதிய 'கவிப்பூஞ்சுடர்' நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். முதல் பிரதியை எழுத்தாளரும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத் தலைவருமான ஆ. மாரிமுத்து பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நூல் திறனாய்வு நிகழ்வில், மருத்துவர் புளோரா நெல்சன் மற்றும் வ.உ.சி கல்லூரியின் முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி ஆகியோர் 'கவிப்பூஞ்சுடர்' நூலின் கவிதைகள் குறித்து விரிவான திறனாய்வு உரை நிகழ்த்தினர்.
நிகழ்வின் நிறைவாக நூலாசிரியர் மு. செல்வி ஏற்புரையாற்றினார். விழாவில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

