தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்டச் சிறப்பு முகாம் கடந்த 26-ம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தூய்மைப் பணிகள் மற்றும் கல்விச் சுற்றுலாக்கள் இடம்பெற்றன.

முகாமில் டாக்டர் விக்னேஷ் பங்கேற்று, செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்துப் பேசினார். பிரேமா இருமதி தொழுநோய் மருத்துவமனையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட மாணவர்கள், அங்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரில் சந்தித்து அன்புடன் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து, கீழ அழகாபுரி முத்தாரம்மன் திருக்கோவில் வளாகம் மற்றும் திருக்குறிப்பு தொண்டர் பள்ளி வளாகத்திலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். மாணவர்கள் சிபில் ஐஸ் தயாரிப்புத் தொழிற்சாலை மற்றும் நிலா சீ ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு அழைத்துப் போகப்பட்டு உற்பத்திச் செயல்முறைகளை நேரில் பார்வையிட்டனர்.

மேலும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி, ஊராட்சிச் செயலாளர் ஜெயரத்தினம், சுகாதார ஊக்குனர் ஆரோக்கியமேரி ஆகியோர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தனித்தனியாகப் பிரிப்பது குறித்துச் சுகாதார ஊக்குனர் விளக்கிப் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாப்பிள்ளையூரணி உரம் தயாரிக்கும் மையத் தொழிலாளர்கள் மற்றும் கீழ அழகாபுரி பொதுமக்களுக்குப் போதை ஒழிப்பு, காசநோய் தடுப்பு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தமிழன்டா கலைக்குழுத் தலைவர் ஜெகஜீவன் மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்துப் பேசினார். மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அமைந்த இம்முகாமில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.