தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடி – சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில் சேவையை முறைப்படுத்த வேண்டும் அல்லது தூத்துக்குடியில் இருந்து பகல்நேர நேரடி ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை எழும்பூர் – குருவாயூர் இடையே இயங்கும் விரைவு ரயில் (16127/16128), தமிழகத்தின் முக்கிய நகரங்களான நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகியவற்றை பகல் நேரத்தில் சென்னையுடன் இணைக்கும் முதன்மை ரயிலாக விளங்கி வருகிறது.
இந்த ரயிலுக்கு இணைப்பாகத் தூத்துக்குடி – சென்னை இணைப்பு எக்ஸ்பிரஸ் (16129/16130) இயக்கப்பட்டு வந்தது. இந்த இணைப்பு ரயிலில் வரும் பயணிகள் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் வைத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டு சென்னைக்கு பயணிப்பது வழக்கம்.
ஆனால், கடந்த சில மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் மற்றும் கூட்ட நெரிசல் காரணங்களைக் காட்டி இந்த இணைப்பு ரயில் அடிக்கடி தாமதமாகவும், சில நாட்களில் பகுதி ரத்து செய்யப்பட்டும் வருகிறது. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் செல்ல நேரடி ரயில் இல்லாத அவலநிலை உருவாகியுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி செல்லும் இணைப்பு ரயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் வரும் நடைமேடைக்கே சென்று நிறுத்தப்படுகிறது. இருப்பினும், ஏற்கனவே குருவாயூரில் இருந்து நிரம்பி வரும் அந்த ரயிலில் தூத்துக்குடி மக்களுக்கு அமர இடம் கிடைப்பதே இல்லை.
மேலும், இரு மார்க்கங்களிலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக வரும் சமயங்களில், மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் இயக்கப்படுவதும் இல்லை. இதனால் பயணிகள் நடுவழியில் தவிக்கும் நிலை தொடர்கிறது.
இதுகுறித்துத் தூத்துக்குடி பயணிகள் நலச்சங்கம் தெரிவிப்பதாவது: "பெயரளவில் இயங்கும் இந்தத் தூத்துக்குடி - மணியாச்சி இணைப்பு ரயிலை முற்றிலும் ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அல்லது மதுரை/திருச்சிக்கு புதிய பகல்நேர நேரடி ரயில்களை இயக்க வேண்டும்.
அதேபோல், நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர ரயிலுக்காகத் தூத்துக்குடியில் இருந்து இரவு 10:45 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு இயக்கப்படும் இணைப்பு ரயிலில் பயணிகளே இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, அந்தப் பயனற்ற ரயிலையும் ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்கத் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

