தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திர்தோப்பு கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி குருவம்மாள் (58). இவர் ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டம் ஒன்றில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, புதருக்குள் இருந்த விஷப் பாம்பு ஒன்று குருவம்மாளின் இடது காலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்ததால் வலியால் அலறிய அவரை, அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குருவம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.