தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமம் சிந்தாமணி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ் மகன் கருப்பசாமி (30). சமையல் மாஸ்டரான இவர், அப்பகுதியில் உள்ள வசந்தம் நகரில் முயல் மற்றும் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) கருப்பசாமி வழக்கம்போல் தனது பண்ணைக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, அதன் அருகிலுள்ள முள்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட மர்மக் கும்பல், திடீரென கருப்பசாமியை வழிமறித்து அரிவாளால் தாக்கியுள்ளது.

தாக்குதலில் நிலைகுலைந்த கருப்பசாமி அணிந்திருந்த 10 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த கருப்பசாமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துக் கருப்பசாமி அளித்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, தப்பியோடிய 3 மர்ம நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.