தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துச்சாமிபுரம் - பந்தல்குடி சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சங்கரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேட்டில்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் கருப்பசாமி (56). இவர் சங்கரலிங்கபுரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் நாகலாபுரம் நோக்கிப் பந்தல்குடி - நாகலாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே ஹீரோ கிளாமர் இருசக்கர வாகனத்தில் வந்த சிவலாற்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சசிகுமார் (20) என்பவரின் வாகனம், எதிர்பாராத விதமாகக் கருப்பசாமியின் வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த சசிகுமார், 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துப் புதூர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

