பிரசித்தி பெற்ற கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நேற்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருக்கல்யாணத் திருவிழாவில், தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரங்களில் திருவீதியுலா நிகழ்வுகளும் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டுத் திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. காலை8 மணிக்கு அம்மன் பல்லக்கில் வீதியுலா வந்ததைத் தொடர்ந்து, 11.30 மணிக்குச் சுவாமி மற்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதியுலாவும், தெப்பத்தில் மஞ்சள் தீர்த்த நீராடுதலும் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி-அம்மன் மண்டபத்தில் எழுந்தருளினர்.

பூவனநாதர் சுவாமி - செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணத்திற்காக, ஸ்ரீதேவி - பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கு அலங்காரத்தில் சீர்வரிசைகளுடன் அழைத்து வரப்பட்டார். பெருமாள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்கத் திருமணச் சடங்குகள் நிறைவுபெற்று, திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருக்கல்யாணம் முடிந்த பின் சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பூப்பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்வில் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜகுரு, உறுப்பினர் திருப்பதி ராஜா, செயல் அலுவலர் (பொறுப்பு) காந்திமதி, திருக்கோவில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.