தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் குமாரபுரம் பகுதியில் தற்போது புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வட்டார போக்குவரத்து அலுவலரிடம் (RTO) முறையான அனுமதி பெறாமல் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட பொதுநல மனுவை மறுசீராய்வு செய்து, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று அறிக்கையாகத் தாக்கல் செய்யவும், ஏற்கனவே தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கீழத்திருச்செந்தூர் மாட்டுத்தாவணி பகுதியிலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நகராட்சி நிர்வாகத்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுவதில்லை. அவர்களை யாரும் கேள்வி கேட்பதும் இல்லை. நகராட்சி நிர்வாகத்துறை ஒரு தனி அரசாங்கத்தையே நடத்தி வருகிறது" என வாய்மொழியாகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, திருச்செந்தூர் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தமிழக அரசு தரப்பில் விளக்கமான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.