தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கார் ஒன்று நேற்று வல்லநாடு வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது வசவப்பபுரம் செக்போஸ்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் அந்த காரை நிறுத்துமாறு சிக்னல் செய்தனர்.
ஆனால், காரை நிறுத்தாமல் ஓட்டுநர் அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் பின்தொடர்வதைக் கண்ட மர்ம நபர்கள், செய்துங்கநல்லூர் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து போலீசார் காரைச் சோதனையிட்டபோது, அதில் 7 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், ரூ. 4 லட்சம் ரொக்கப் பணம், ஒரு கத்தி மற்றும் அரிவாள் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டது. காரையும் அதிலிருந்த பொருட்கள் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்த செய்துங்கநல்லூர் போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

