திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

தங்கத் தேரோட்டத்தைத் திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரளான பெண் பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்துத் தங்கத் தேரை நான்கு மாடவீதிகளில் இழுத்துச் சென்றனர்.

தங்கத் தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வந்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க, மின்ஒளியில் ஜொலித்தவாறு வலம் வந்த தங்கத் தேரை மாடவீதி கேலரிகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீதேவி செல்வத்திற்கும், பூதேவி தானிய வளங்களுக்கும் அடையாளமாகக் கருதப்படுகின்றனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்கத் தேரில் பவனி வருவதை தரிசனம் செய்வதன் மூலம் சர்வ மங்களங்களும், சகல ஐஸ்வர்யங்களும், தானிய வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இத் தங்கத் தேரோட்டத்தில் ஸ்ரீமத் திருமலை ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.