தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி சீனந்தோப்பு சாலையில் இருவர் வீச்சரிவாள்களுடன் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது, அங்கே நின்றிருந்த இரு நபர்களும் சேர்ந்து காவல்துறையினரையே அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் சாதுரியமாகச் செயல்பட்டு இருவரையும் மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ஆறுமுகனேரி ராஜாமணியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜா (30) மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3-ஆவது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஆனந்தராஜ் (20) என்பது தெரியவந்தது.

இருவரிடமிருந்தும் 2 அரிவாள்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்பேரில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.