தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த இன்னோஸ்குமார் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் தரவு பதிவாளராக பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு, இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் பாலியல் ரீதியிலான மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் தனது கணவரிடம் தெரிவிக்கவே, அவர் இன்ஸ்பெக்டரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், அந்தப் பெண் ஊழியரை வேலைக்கு வரவேண்டாம் எனக்கூறி அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அப்பணியிடத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பெண் போலீஸ் ஒருவருக்கும், இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வாட்ஸ்அப் மூலம் பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இரு பெண் ஊழியர்களும் அளித்த வாய்மொழிப் புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமாரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் இரா.திருநாவுக்கரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.