தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் செயல்பட்டு வரும் 'நிசான் ஸ்போர்ட்ஸ் & ரெக்கரேஷன்' கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகப் புதூர் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் உள்ள கிளப்பில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட துரைசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்பாண்டி (54), புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி (62), கம்பத்துபட்டி கிராமத்தைசேர்ந்த துரைப்பாண்டி (54), சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி(60), சின்னூர் கிராமத்தைச்சேர்ந்த பால்ராஜ் (65), காடல்குடி கிராமத்தைசேர்ந்த மேன்ஷன் (57), அருப்புக்கோட்டையை சேர்ந்த முத்தையா (30), அருப்புக்கோட்டை சேர்ந்த முத்துமூர்த்தி(40), புதூரை சேர்ந்த திருப்பதி உள்ளிட்ட 9 பேரை புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.8,000 ரொக்கப் பணம் மற்றும் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு மதிப்புள்ள டோக்கன் கட்டுகள் (ரூ.2000 மதிப்புள்ள 10 டோக்கன்கள், ரூ.300 மதிப்புள்ள 25, ரூ.1000 மதிப்புள்ள 20, ரூ.500 மதிப்புள்ள 10 டோக்கன்கள்) மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.