உர விநியோகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய 'உர விற்பனைக்கான கட்டமைப்பு முறை' (FFS) நவம்பர் முதல் வாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அறிமுகமாகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதியும், உர விற்பனையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் 'உர விற்பனைக்கான கட்டமைப்பு முறை' (Frame work for Fertilizer Sale - FFS) எனும் புதிய நடைமுறை நவம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகளுக்கு உரங்கள் உரிய முறையில் கிடைப்பதை உறுதி செய்ய இத்திட்டம் முதற்கட்டமாகச் சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக (Phase-II) நவம்பர் முதல் வாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உர விற்பனை, இருப்பு விவரங்கள் மற்றும் விவசாயிகளின் உரத் தேவைகளை டிஜிட்டல் முறையில் துல்லியமாகக் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் உரம் பெறும் முறை:

விவசாயிகள் தங்களது கைபேசி, கணினி அல்லது பொதுச் சேவை மையம் (CSC) மூலம் FFS செயலியில் இணையவழியாகத் தங்களது உரத் தேவையைப் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின் உருவாக்கப்படும் QR குறியீட்டினை (QR Code) பயன்படுத்தி, அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனை நிலையங்களில் உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விவசாய அடையாள எண் உள்ளவர்கள் தங்களது ஆதார் எண் அல்லது உழவர் பதிவேட்டில் (Farmers Registry) உள்ள அடையாள எண்ணை உள்ளீடு செய்து நில விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

அடையாள எண் இல்லாத நில உடைமையாளர்கள், சாகுபடியாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் கோவில் நிலச் சாகுபடியாளர்களும் செயலியில் ஆதார் எண் மற்றும் பயிர் சாகுபடி விவரங்களைப் பதிவு செய்து உரம் பெறலாம்.

பதிவு செய்வதில் சிரமம் இருப்பின், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது உர விற்பனை நிலையங்களை அணுகி உதவி பெறலாம்.

விற்பனையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளர்களும் தங்களது கடைகளில் உள்ள உண்மை இருப்பை (Physical Stock), விற்பனை முனையக் கருவி (POS) பதிவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். விவசாயிகளிடம் பெறப்படும் QR குறியீட்டை POS கருவியில் பதிவு செய்து, FFS நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுமே உரம் வழங்க வேண்டும்.

உர விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், முறைகேடுகளைத் தடுத்தல், மற்றும் நிலம் மற்றும் பயிரின் தேவைக்கேற்ப சரியான அளவில் உரம் பரிந்துரை செய்வதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாத்து, விவசாயிகளின் தேவையற்ற பண விரயத்தைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் உர விற்பனையாளர்கள் இப்புதிய நடைமுறை குறித்து விழிப்புணர்வு பெற்று வேளாண்மைத்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.