திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (NH-138) அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

வல்லநாடு பாலத்தின் Deck Slab பகுதியில் தொடர்ந்து சேதங்கள் ஏற்படுவது குறித்து, 'வீ த லீடர்ஸ்' தன்னார்வலர் மு. சுகன் கிறிஸ்டோபர் CPGRAMS இணையதளம் வாயிலாக மனு அளித்திருந்தார்.

இதற்கு NHAI தூத்துக்குடி திட்ட இயக்குநர் கிருஷ்ணேந்திர திவேதி அளித்த பதிலில்: IIT மற்றும் CRRI நிபுணர் குழுக்களின் பரிந்துரைப்படி பாலத்தின் சீரமைப்புப் பணிகள் 10.07.2024 அன்று நிறைவடைந்தன.

அதன்பின்னரும் சிறிய பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் ஏற்படுவது உண்மைதான். அவை கண்டறியப்படும் இடங்களில் ஒப்பந்ததாரர் மூலம் உடனுக்குடன் தற்காலிகச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாலத்திற்கு நிரந்தரச் சீரமைப்பு மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஜூலையில் உயர்மட்ட நிபுணர் அமைப்புகளின் பரிந்துரைப்படி சீரமைப்பு முடிவடைந்த பின்னரும் மீண்டும் மீண்டும் சேதம் அடைவது ஏன் என்றும், அப்பணிகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் சுகன் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

மேலும், தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்லும் இப் பாலத்தில் தற்காலிகப் பணிகளைத் தவிர்த்து, மீண்டும் ஒரு முழுமையான கட்டமைப்புப் பாதுகாப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், நிரந்தரச் சீரமைப்புப் பணிகளுக்கான நிதி ஒப்புதலை விரைந்து வழங்கிப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.